கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
கர்நாடகா மாநிலத்தில் பருவமழை பொய்த்து போன நிலையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளனர். விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கர்நாடகா நீர் பாதுகாப்பு குழு மற்றும் கரும்பு விவசாயிகள் இணைந்து நேற்று முன்தினம் பெங்களூரில் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை(செப்.,29) மாநிலம் முழுவதிலுமான முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்பு கூட்டமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக எல்லையான ஓசூர் வரை மட்டுமே பேருந்து சேவை
இப்போராட்டமானது மிக தீவிரமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இன்று(செப்.,28) இரவு முதல் பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இது நாளை இரவு வரை அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. அதனை தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில், இந்த பந்த் எதிரொலியாக நாளை தமிழக எல்லைகள் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைப்படி, இன்று நள்ளிரவு வரை மட்டுமே கர்நாடகா-தமிழகம் இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும். நள்ளிரவுக்கு பிறகு, தமிழகத்தில் இருந்து கர்நாடகா புறப்படும் பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையான ஓசூரில் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.