பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பாக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்
உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ராம்தேவ், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டபோதும், பதஞ்சலியின் மருந்துப் பொருட்களின் தவறான விளம்பரங்கள் குறித்த உத்தரவுகளை மீறியதற்காக பாபா ராம்தேவ் மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. "நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம். மன்னிப்பு கேட்க அவர் (பாபா ராம்தேவ்) தனிப்பட்ட முறையில் இங்கே இருக்கிறார்" என்று பதஞ்சலி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும்,உச்ச நீதிமன்றம்,"ஒவ்வொரு தடையையும் உடைத்து விட்டீர்கள்... இப்போது மன்னிக்கவும் சொல்கிறீர்கள்" என்று கண்டித்தது.
மத்திய அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும் கடுமையாக சாடியுள்ளது. "அலோபதியில் கோவிட்க்கு தீர்வு இல்லை என்று பதஞ்சலி நிர்வாகம் ஊருக்குச் சொல்லும் போது, மத்திய அரசு ஏன் கண்களை மூடிக்கொண்டது ?" என்று நீதிமன்றம் கூறியது. இதனைத்தொடர்ந்து, பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் கடைசி எச்சரிக்கை வழங்கியது. மேலும் ஒரு வாரத்திற்குள் புதிய பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. பதஞ்சலி, மருத்துவ குணங்கள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. நவீன மருத்துவத்தை விமர்சித்த பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.