பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன
அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் மற்றும் புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதும் உள்ள பல்வேறு கலைஞர்கள் இன்று வரவேற்க உள்ளனர். இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை செல்லும் பாதையான ராமர் பாதையில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 40 மேடைகளில் 1,400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாட்டுப்புற கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்." என்று கூறப்பட்டுள்ளது. பிரதமரின் வருகைக்கு பிறகு, 15,700 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஒரு பொது நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.
களைகட்ட இருக்கும் அயோத்தி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடக்க இருக்கிறது. சீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம் மற்றும் புதிய விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்தி நகருக்கு செல்கிறார். விமான நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்ற இருக்கிறார். "பிரதமர் காலை 10.45 மணியளவில் அயோத்தி விமான நிலையத்தை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, அவர் நேராக அயோத்தி ரயில் நிலையத்திற்குச் செல்வார். அங்கு அவர் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தைத் திறந்து வைப்பார். பின்னர் அவர் புதிய விமான நிலையத்தை திறந்து வைப்பார். பின்னர் ஒரு பொது பேரணியில் உரையாற்றுவார்" என்று அயோத்தியின் பிரதேச ஆணையர் கூறியுள்ளார்.