விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு ஏர் இந்தியா நிறுவனத்திடம் காரணத்தை கேட்டது விமான போக்குவரத்து அமைச்சகம்
நேற்று இரவு முதல் ஏறக்குறைய 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் இருந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது. கடைசி நிமிடத்தில் கேபின் குழுவினரின் ஒரு பிரிவினர் திடீரென்று மொத்தமாக "சிக் லீவ்" எடுத்ததால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின்(டிஜிசிஏ) தரநிலைகளின்படி, சிக்கல்களை உடனடியாகச் சரிசெய்து, பயணிகள் சேவைகளை வழங்குமாறு ஏர் இந்தியா விமான நிறுவனங்களுக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு விதிமுறைகள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய பணியாளர்கள் இந்த நூதன போராட்டத்தை செய்வதாக நம்பப்படுகிறது.
சம்பளம் மற்றும் சலுகை பிரச்சனைகளால் ஊழியர்கள் போராட்டம் செய்கிறார்களா?
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உடன் AIX கனெக்ட்(முன்னர் ஏர் ஏசியா இந்தியா) என்ற நிறுவனத்தை இணைத்ததற்கு பிறகு ஏற்பட்ட சம்பளம் மற்றும் சலுகை பிரச்சனைகளுடன் இதற்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், "எங்கள் கேபின் குழுவில் ஒரு பகுதியினர் கடைசி நிமிடத்தில் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் நேற்றிரவு தொடங்கி, விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன." என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு பணத்தைத் திரும்பத் தர ஒப்புக்கொண்டது. அப்படி இல்லையென்றால், பயணிகள் தங்கள் பயணத்தை மற்றொரு தேதிக்கு எந்த கட்டணமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.