LOADING...
அசாம், கேரளா, மேற்கு வங்காள தேர்தல் கருத்துகணிப்புகள்! இதோ முழு விவரம்!
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன

அசாம், கேரளா, மேற்கு வங்காள தேர்தல் கருத்துகணிப்புகள்! இதோ முழு விவரம்!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 29, 2026
07:40 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வந்த சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29, 2026) மாலை 6 மணியுடன் முழுமையாக நிறைவடைந்தது. ஜனநாயகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, வாக்காளர்களின் மனநிலை என்ன என்பதைத் தெரிவிக்கும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதில் முன்னணி கணிப்பு நிறுவனமான ஆக்சிஸ் மை இந்தியா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணித்துள்ளது.

அசாம்

அசாம்: பாஜக கூட்டணியின் அசுர பலம்

அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணி 88 முதல் 100 இடங்களை கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணி வெறும் 24 முதல் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணி 48% வாக்கு சதவீதத்தைப் பெறும் என்றும், காங்கிரஸ் 38% வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் காங்கிரஸ் 7% கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும், நகர்ப்புற மற்றும் இதர பகுதிகளில் பாஜகவின் ஆதிக்கம் அதனைச் சமன் செய்துள்ளது. 2021 தேர்தலை விட இம்முறை சிறிய கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை இழந்துள்ளன.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்கம்: பாஜகவின் வரலாற்றுச் சாதனை?

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவை. சாணக்யா ஸ்டரேட்டஜிஸ் வெளியிட்டுள்ள கணிப்பின்படி: பாஜக: 150 முதல் 160 இடங்களைக் கைப்பற்றி முதன்முறையாக வங்காளத்தில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் (TMC+): 130 முதல் 140 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்துக்குத் தள்ளப்படலாம். மேட்ரைஸ் (Matrize), பி-மார்க் (PMARQ), போல் டைரி மற்றும் பிரஜா போல் என ஐந்து முன்னணி நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் பாஜகவின் வெற்றியையே உறுதி செய்துள்ளன. 'பீப்பிள்ஸ் பல்ஸ்' மட்டுமே மம்தா பானர்ஜிக்கு ஆதரவாகக் கணித்துள்ளது. இது 2026 தேர்தலின் மிகப்பெரிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது.

Advertisement

கேரளா

கேரளா: UDF தலைமையிலான ஆட்சி மாற்றம்

கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு (LDF) எதிராக வலுவான அதிருப்தி நிலவுவதை எக்சிட் போல் முடிவுகள் காட்டுகின்றன. ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பின்படி: யு.டி.எப் (UDF) 78 முதல் 90 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிகிறது. எல்.டி.எப் (LDF): 49 முதல் 62 இடங்களுக்குள் சுருங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பாஜக (BJP+): 0 முதல் 3 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், பாஜகவின் 14% வாக்கு வங்கி பல தொகுதிகளில் இடதுசாரிகளின் வெற்றியைப் பாதித்து, காங்கிரஸ் கூட்டணிக்குச் சாதகமாக மாறியுள்ளது.

Advertisement