உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி
அசாம் காவல்துறை அதிகாரிகளின் உடற்தகுதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், "தகுதியற்றவர்கள்" என்று கண்டறியப்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் அசாமின் காவல்துறை தலைமை இயக்குனர் ஜி.பி. சிங் தெரிவித்துள்ளார். காவல்துறையினருக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட இருக்கிறது. மேலும், அவர்களின் உடல் நிறை குறியீட்டு எண்(BMI), 15 நாட்களுக்கு ஒருமுறை பதிவு செய்யப்படும் என்று சிங் தெரிவித்திருக்கிறார். "அசாம் காவல்துறையினருக்கு ஆகஸ்ட் 15 வரை, மூன்று மாதங்கள் அவகாசம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்... அடுத்த 15 நாட்களில் BMI மதிப்பீட்டைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்." என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.
ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்: அசாம் டிஜிபி
"உடல் பருமனான(BMI 30+) பிரிவில் உள்ள அனைவருக்கும் எடையைக் குறைக்க நவம்பர் இறுதி வரை மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு VRS (தன்னார்வ ஓய்வூதியத் திட்டம்) விருப்பத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்" என்று அவர் மேலும் கூறி இருக்கிறார். ஹைப்போ தைராய்டிசம் போன்ற உண்மையான மருத்துவப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இந்த நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று சிங் மேலும் கூறினார். மேலும், இந்த BMI மதிப்பீட்டை மேற்கொள்ளும் முதல் நபராக தான் இருப்பேன் என்றும் அசாம் டிஜிபி கூறியுள்ளார். கடந்த வாரம், இவர் தன்னிடம் 680 அசாம் காவலர்களின் பட்டியல் இருப்பதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. பருமனாகவோ அல்லது குடிப்பழக்கம் உள்ளவர்களாகவோ இருப்பவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.