அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 1.05 லட்சம் மக்கள் பாதிப்பு
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) கூற்றுப்படி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அசாமின் 14 மாவட்டங்களில் 1.05 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக கரீம்கஞ்ச் என்ற மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட 96,000 குடியிருப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பிரம்மபுத்திரா நதி மற்றும் அதன் கிளை நதியான கோபிலி நதியின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி உயர்ந்துள்ளது. அசாம், மேகாலயா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 20ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஒரு மாதத்திற்குள் அசாமில் ஏற்படும் இரண்டாவது வெள்ளப்பெருக்கு
ஜூன் 18 அன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று IMD குறிப்பாக எச்சரித்துள்ளது. வெள்ள நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, அசாம் அரசு 11 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களை நிறுவியுள்ளது. அங்கு 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். அசாம் முழுவதிலும் உள்ள 309 கிராமங்களை வெள்ளம் பாதித்துள்ளது. ASDMA மூலம் கரீம்கஞ்ச் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக சுமார் 1005.7 ஹெக்டேர் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மே கடைசி வாரத்தில் ரெமல் சூறாவளியால் ஏற்பட்ட முதல் வெள்ளப்பெருக்கிற்கு பிறகு, ஒரு மாதத்திற்குள் அசாமில் ஏற்படும் இரண்டாவது வெள்ளப்பெருக்கு இதுவாகும். முதல் வெள்ளப்பெருக்கின் போது, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர்.