குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது?
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று(ஆகஸ்ட் 2) குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தனர். மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் 31 பேர் இன்று குர்டியரசு தலைவரை சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை விடுத்ததை அடுத்து, இன்று காலை 11 மணிக்கு 31 எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.
ஹரியானாவில் நிலவி வரும் பதட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பேச்சு
குடியரசு தலைவரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் சமர்ப்பித்த குறிப்பாணையில், தற்போது இனக்கலவரத்தால் ஹரியானாவில் நிலவி வரும் பதட்டம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் நடந்து கொண்டிருக்கும் ஹரியானா கலவரம் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மணிப்பூருக்குச் சென்ற எம்.பி.க்கள் அம்மாநிலத்தின் நிலைமையை குடியரசுத் தலைவருக்கு எடுத்துரைத்து தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர் என்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார். "மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் அவசரமாக உரையாற்றுவதற்கு பிரதமருக்கு அழுத்தம் கொடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், அதைத் தொடர்ந்து இந்த விஷயத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சி குழு குறிப்பாணையில் தெரிவித்துள்ளது.