உலக வளர்ச்சியில் 'ஆசியான்' அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பேச்சு
இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் 18வது கிழக்காசிய உச்சிமாநாடுகள் மற்றும் 20வது ஆசியான்-இந்தியா மாநாடு இன்று(செப்.,7)நடந்தது. இந்த மாநாடுகளில் கலந்துகொள்ளுமாறு இந்தோனேசியா அதிபர் ஜோகா விடோடா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில், இதில் பங்குகொள்ள மோடி நேற்று(செப்.,6) இரவு இந்தோனேசியா சென்றடைந்தார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த மாநாடு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய மோடி,"ஆசியான் மாநாட்டில் பங்கேற்று பேசுவது மிகவும் பெருமையளிக்கிறது. இந்த உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்த அதிபர் ஜோகா விடோடாவுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது. சர்வதேச அளவில் வளர்ச்சிக்கு இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏன் என்றால் இங்கு அனைவரது குரல்களும் கேட்கப்படுகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தாவில் மோடியை வரவேற்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள்
மேலும் அவர் பேசுகையில்,"இந்தியாவையும் ஆசியானையும் எங்கள் புவியியல் மற்றும் வரலாறு ஒன்றிணைக்கிறது. இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கையான 'கிழக்கு நோக்கிய செயல்பாட்டின்' முக்கிய அங்கமாக ஆசியானுடன் இணைந்து செயல்படுவது அமைந்துள்ளது" என்றும், "நமது பகிரப்பட்ட மதிப்புகள், வளர்ச்சி, செழிப்பு, அமைதி, பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பல துருவ உலகம் நமது பகிரப்பட்ட நம்பிக்கை" என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, ஆசியான் பிராந்தியத்துடனான நமது உறவினை மேலும் பலப்படுத்த வேண்டும்" என்றும் மோடி கூறியுள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஆசியான் அமைப்பின் பிற தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். முன்னதாக ஜகார்த்தா சென்றடைந்த மோடிக்கு இந்திய கலாசார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவரை கைகுலுக்கி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.