காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இன்று(ஏப் 11) ஜெய்ப்பூரில் தனது சொந்த அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார்.
நேற்றிரவு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இந்த போராட்டம் "கட்சி விரோத நடவடிக்கையாக" பார்க்கப்படும் என்று கூறியதையும் மீறி, அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்.
இந்த போராட்டம் காங்கிரஸ் கட்சி தலைவரும் பைலட்டின் போட்டியாளருமான அசோக் கெலாட்டிற்கு எதிராக நடத்தப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்களுக்கு எதிராக முதல்வர் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்த உண்ணாவிரதத்தை அவர் நடத்துகிறார்.
நேற்றிரவு, அரசாங்கத்திற்கு எதிராக உண்ணாவிரதத்தை நடத்துவது "கட்சி விரோத நடவடிக்கைக்கு" சமம் என்று காங்கிரஸ் கட்சி கடுமையான எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.
details
கட்சியின் முக்கிய முகம் யார் என்ற பிரச்சினை
ராஜஸ்தானின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி(AICC) பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, பைலட்டின் உண்ணாவிரதம் கட்சியின் நலனுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு மத்தியில் அல்லாமல், கட்சி மன்றங்களில் இந்த பிரச்சினைகளை விவாதிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பைலட்டின் குற்றச்சாட்டுகளை கெலாட் அரசாங்கம் மறுத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்த போராட்டத்தைப் பைலட் நடத்துவது மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
பைலட் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினாலும், தேர்தல் வரும் ஆண்டில் அவர் இப்படி செய்வது, கட்சியின் முக்கிய முகம் யார் என்ற பிரச்சினையைத் தீர்க்க காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் அவரது முயற்சியாகக் கருதப்படுகிறது.