திஹார் ஜெயிலில் டெல்லி முதல்வரின் முதல் நாள் எப்படி கழிந்தது?
திஹார் சிறையில் முதல் இரவைக் கழித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இன்று காலை பிரட் மற்றும் டீ காலை உணவாக வழங்கப்பட்டது. நேற்று மாலை, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) நிறுவனர் மற்றும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 15 வரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரை திகார் சிறையில் அடைத்தனர். முதல் நாள் இரவை சிறையில் கழித்த கெஜ்ரிவாலின் டெய்லி ரொட்டின் எப்படி இருந்தது என, இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6.40 மணியளவில் அவருக்கு காலை உணவு வழங்கப்பட்டதாக தெரிவித்தன.
சிறையில் ஒரு நாள்!
அரவிந்த் கெஜ்ரிவால், திஹார் ஜெயிலில், சிறை எண் 2இல் தனியாக சிறை வைக்கப்பட்டுள்ளார். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தனது அறையில் தியானம் செய்தார் எனவும், அதைத்தொடர்ந்து யோகாவும் செய்தார் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதன்பின்னர், மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திஹார் ஜெயிலில் அனைத்து கைதிகளும் மாலை 3 மணி வரை தங்கள் அறையை விட்டு வெளியே உலாவலாம். அதன் பின்னர் தத்தமது அறைகளுக்கு திரும்ப வேண்டும். பின்னர், மாலை 5.30 மணிக்கு அவருக்கு இரவு உணவு வழங்கப்படும். இரவு 7 மணிக்குள் அறைக்கதவு பூட்டப்படும். காலை 5 மணி-இரவு 11 மணி வரை சிறைக்குள் அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சியை பார்க்கலாம்.