அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(ஜூன் 1) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அரசாணைக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்கு ஆதரவு கோரினார். அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கு இடமாற்றுவதற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. மேலும், டெல்லியின் துணைநிலை ஆளுநர், டெல்லி மாநில அரசாங்கத்தின் பேச்சை கேட்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு சார்பாகவும், டெல்லியின் துணைநிலை ஆளுநரும் மத்திய அரசின் பிரதிநிதியுமான வி.கே.சக்சேனாவுக்கு எதிராகவும் வந்திருந்தது. இது நடந்து சில நாட்களுக்குள் மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
மத்திய அரசுக்கு எதிராக ஒன்று திரளும் எதிர்க்கட்சிகள்
அந்த சட்டத்தின் மூலம், அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கு இடமாற்றுவதற்கும் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது எதிர்கட்சிகளின் ஆதரவை திரட்டி கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை நாடுளுமன்றத்தில் தோற்கடிப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர். கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிப்போம் என்று ஏற்கனவே தமிழக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஆகியோரை ஏற்கவே கெஜ்ரிவால் சந்தித்துவிட்டார்.