டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தடாலடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இரண்டு நாட்கள் கழித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். மக்கள் தீர்ப்பை அறிவிக்கும் வரை அந்த நாற்காலியில் அமரமாட்டேன். டெல்லியில் தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ளன. சட்ட நீதிமன்றத்தில் நீதி கிடைத்தது, இனி மக்கள் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும். மக்களின் உத்தரவுக்கு பிறகே நான் முதல்வர் நாற்காலியில் அமர்வேன்." என்று கூறினார்.
டெல்லி சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல்
டெல்லி முதலமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்த பிறகு, ஆம் ஆத்மி கட்சியியிலிருந்து வேறு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு தற்காலிகமாக முதல்வர் பொறுப்பை ஏற்பார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் மத்தியில் சென்று தான் ஆதரவு கேட்பேன் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்க உள்ள டெல்லி சட்டசபைத் தேர்தலை முன்கூட்டியே நம்பரில் மகாராஷ்டிரா தேர்தலுடன் நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய குடிமைப் பணியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அண்ணா ஹசாரே போராட்டத்தில் முக்கிய நபராக செயல்பட்டு, பின்னர் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி 2013 முதல் டெல்லியின் முதல்வராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.