சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது?
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து செய்யப்பட்டது எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விவகாரத்தில் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கப்படும் இதற்கு பின்னர், ஜம்மு காஸ்மீர் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, வெளிமாநில மக்களுக்கும், தொழில்களும் மற்றும் சுற்றுலாத்துறை அணுகக் கூடிய வகையில் மாறுகிறது.
சட்டப்பிரிவு 370 மற்றும் 35A கூறுவது என்ன?
இந்திய அரசியலமைப்பின் 370 சட்டப்பிரிவு, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சுயாட்சியை வழங்குகிறது. 1947 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லாவால் வரைவு செய்யப்பட்டு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்கால ஏற்பாடாக செய்யப்பட்ட இது, அக்டோபர் 1949ல் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. பின்னர் 1954 ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு பல சிறப்பு உரிமைகளை வழங்கும் பிரிவு 35A அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
2019க்கு பின் காஷ்மீர் எவ்வாறு மாறியுள்ளது?
2019 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு முதலீடுகள் வரத் தொடங்கின. மேலும் சுற்றுலாத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. சமீபத்தில் மத்திய அரசு தனியார் சுரங்கத்திற்காக, காஷ்மீரில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் இருப்புக்களை பட்டியலிட்டுள்ளது மேலும் பிரிவினைவாத வன்முறைகளும் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்ரீநகரில், சுற்றுலா தொடர்பான G20 கூட்டம் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு பிரிவுகள் என்ன அதிகாரத்தை வழங்கின?
சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு நிதி, பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றைத் தவிர, பிறகு விவகாரங்களில் சட்டமேற்றும் உரிமையை அம்மாநில சட்டமன்றத்திற்கு வழங்கி இருந்தது. மேலும், சட்டப்பிரிவு 35A, வேறு மாநிலத்தவர்கள் அம்மாநிலத்தில் நிலம் வாங்குவதையோ, அரசு வேலைகளில் சேர்வதையோ தடுத்து வந்தது. இந்நிலையில், பிரிவு 370-ஐ ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரிவு 35Aவும் ரத்து செய்யப்பட்டது. நிரந்தர குடியிருப்பாளர்கள் சட்டம் என குறிப்பிடப்படும் பிரிவு 35A, அம்மாநில பெண்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியில் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு சொத்துரிமை வழங்குவதை தடை செய்திருந்தது.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. லடாக் சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் உடைய யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என மத்திய அரசு அறிவித்தது. தேர்தல் நடைபெறாததால் ஆகஸ்ட் 5, 2019 முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக், துணை நிலை ஆளுநர்களின் அதிகாரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய சொலிசிட்டர் ஜெனரல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் எனவும், யூனியன் பிரதேச அங்கீகாரம் தற்காலிகமானது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாக, இன்றைய தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்தது.
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை மறுவரையறை
மே 2022ல், ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையம், ஜம்மு காஷ்மீரில் புதிய எல்லைகள், பெயர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அறிவித்தது. மே 5ம் தேதி தனது இறுதி அறிக்கையை வழங்கிய அந்தக்குழு, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு பகுதியில் 43 தொகுதிகளும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் பகுதியில் 47 இடங்கள் என மொத்தமாக 90 இடங்களாக அதிகரித்தது. அனைத்து மக்களவைத் தொகுதிகளும் இப்போது தலா 18 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 1990களில் இப்பகுதியில் தீவிரவாதத்தின் உச்சக்கட்டத்தில் இடம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்களை முதன்மையாக உள்ளடக்கிய, காஷ்மீரி புலம்பெயர்ந்த சமூகங்களில் இருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இது தொடர்பான மசோதா சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
மேற்கு பாகிஸ்தான் அகதிகளுக்கு (WPRs) வாக்களிக்கும் உரிமை
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் பகுதியில் அப்பகுதியை சாராத வெளியாட்களும், தேர்தலில் போட்டியிடும் மற்றும் வாக்களிக்கும் உரிமையை பெறுகிறார்கள். இதன் மூலம், 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அகதிகள், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மற்றும் பஞ்சாயத்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மேற்கு பாகிஸ்தானை சேர்ந்த 5,746 அகதி குடும்பங்கள், யூனியன் பிரதேசத்தின் கதுவா, சம்பா மற்றும் ஜம்மு ஆகிய மாவட்டங்களில் வாழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கை 20,000 கடந்துள்ளதாக உள்ளூர் சமுதாய தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.