'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 35A பிரிவு, ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டது என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை தெரிவித்தார். ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான 11வது நாள் விசாரணையின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆகஸ்ட் 2 முதல் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதியை தவிர, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, BR கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோரும் இந்த அமர்வில் அடங்குவர்.
இது குறித்து நேற்று இந்திய தலைமை நீதிபதி கூறியதாவது:
"சட்டப்பிரிவு-35Aஐ அறிமுகப்படுத்தும் போது, நீங்கள் மூன்று அடிப்படை உரிமைகளை பறிக்கிறீர்கள். சட்டப்பிரிவு-16(1) மற்றும் சட்டப்பிரிவு-19(1)(f) வழங்கும் அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு-19(1)(a)க்கு கீழ் அடிப்படை உரிமையாக கருதப்படும், மாநிலத்தில் குடியேறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டப்பிரிவு-35A அமல்படுத்தியதன் மூலம் நீங்கள் அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டீர்கள்." என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இதுதவிர, நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2 முக்கிய கேள்விகளை மத்திய அரசிடம் எழுப்பினார். "மனுதாரர்கள் வாதிட்டபடி, லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது அதன் தரத்தை இறக்குகிறதா? இரண்டாவதாக, குடியரசு தலைவர் ஆட்சி அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கலாம். அந்த 3 ஆண்டுகளைக் ஏற்கனவே நாம் கடந்துவிட்டோம், எனவே அதைத் தெளிவுபடுத்துங்கள்." என்று நீதிபதி கண்ணா கூறியுள்ளார்.