ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
பஞ்சாபின் பதான்கோட் எல்லையை ஒட்டிய ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களில் நடக்கும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இதனால், வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். முதற்கட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டு, என்கவுன்டர் நடந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன. ஒரு நாளுக்கு முன்பு தான், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்களில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை தொடங்கிய இந்த என்கவுன்டர்களில் ஒரு துணை ராணுவ வீரர் உட்பட இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மற்றொரு வீரர் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை நடந்த 2 தாக்குதல்கள்
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் அடங்கிய பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து உளவுத்துறை கொடுத்த தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது முதல் என்கவுன்டர் மோடர்காம் கிராமத்தில் நடந்தது. ஆரம்ப துப்பாக்கிச் சூட்டில், துணை ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். அதன் பிறகு பயங்கரவாதிகள் தஞ்சமடைந்திருந்த வீட்டின் மீது முழு அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நேரத்தில், குல்காமின் ஃப்ரிசல் பகுதியில் மற்றொரு கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. அந்த நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு 4 பயங்கரவாதிகளின் உடல்கள் ட்ரோன் காட்சிகள் மூலம் தெரியவந்தது. இந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.