ஆபரேஷன் சிந்தூர் ஒரு நம்பகமான ஆர்கெஸ்ட்ரா: 22 நிமிடங்களில் இலக்குகள் அழிக்கப்பட்டது குறித்து ராணுவத் தளபதி பேச்சு
செய்தி முன்னோட்டம்
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, இந்திய ஆயுதப் படைகள் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத இலக்குகளை அழித்த ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை ஒரு "நம்பகமான ஆர்க்கெஸ்ட்ரா" என்று வர்ணித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிர்வாகவியல் நிறுவனப் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், இந்த ராணுவ நடவடிக்கை, மாறிவரும் சூழ்நிலைகளை எதிர்பார்த்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டதன் விளைவு என்று தெரிவித்தார்.
நம்பிக்கை
முடிவெடுக்க நேரம் இல்லை: 'நம்பிக்கை' முக்கியம்
இந்திய ராணுவத் தளபதி , "ஆபரேஷன் சிந்தூர் ஒரு நம்பகமான ஆர்கெஸ்ட்ரா போன்றது. அதில் ஒவ்வொரு பிரிவும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டது. அதனால்தான் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத இலக்குகளை எங்களால் அழிக்க முடிந்தது, மேலும் 80 மணி நேரத்தில் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது. நாங்கள் முன்னதாகக் காட்சிப்படுத்தாமல், முழு அணியையும் நம்பாமல் இருந்திருந்தால், முடிவெடுப்பதற்கு நேரம் இருந்திருக்காது." என்று கூறினார். இந்த ராணுவ நடவடிக்கை மே 7 அதிகாலையில் தொடங்கப்பட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது. சுமார் 88 மணி நேரம் நீடித்த இந்த மோதல், மே 10இல் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டிய பின்னர் முடிவுக்கு வந்தது.
தொழில்நுட்பம்
போரில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்
ராணுவ பரிணாம வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். "தொழில்நுட்பம் போரை மாற்றியுள்ளது, சாதாரண குழிகள் முதல் அறிவார்ந்த பிணையங்கள் வரையிலும், துப்பாக்கிகள் முதல் ட்ரோன்கள் வரையிலும், பூட்ஸ் முதல் ரோபோக்கள் வரையிலும் தொழில்நுட்பம் ஊடுருவியுள்ளது." என்று அவர் கூறினார். மேலும், தலைமைப் பண்பு குறித்துப் பேசிய அவர், "போர்க்களத்திலோ அல்லது நிர்வாக அறைகளிலோ, வேகமும் வெற்றியும் கட்டுப்பாட்டிலிருந்து வருவதில்லை, நம்பிக்கையிலிருந்து வருகிறது" என்றும் வலியுறுத்தினார்.