கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரம்: விளக்கம் அளித்தது மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கை அகற்றப்பட்ட குழந்தை, சூடோமோனஸ் என்ற பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்தது என்று சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை முகமது மஹீர். 1.5 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது. இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் போது அந்த குழந்தைக்கு 'ட்ரிப்ஸ்' போடபட்டதாகவும், அப்போது அந்த குழந்தையின் வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டு, கை அழுகியதாகவும் கூறப்படுகிறது.
'7 துறைகளைச் சேர்ந்த மருத்துவர் குழு குழந்தையை கண்காணித்து வந்தது': தேரணிராஜன்
இதனையடுத்து, கடந்த மாதம் அந்த குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது. இதற்கு, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் இதை முற்றிலுமாக மறுத்தார். மேலும், இது மருத்துவர்கள் செய்த தவறினால் ஏற்படவில்லை என்றும், அரசு இதற்கு முழுமையாக ஒத்துழைத்து, தேவையான ஆதாரங்களை வழங்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி இருந்தார். இதற்கிடையில், இன்று காலை, அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து இன்று விளக்கம் அளித்த மருத்துவமனை டீன் தேரணிராஜன், சூடோமோனஸ் பாக்டீரியா தொற்றினால் குழந்தை உயிரிழந்தது என்றும், எந்த விதமான அறுவை சிகிச்சை செய்யவும் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.