'150 நாடுகளுக்கு இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன': ஹேக்கிங் குற்றச்சாட்டை மறுத்தது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
"அரசு ஆதரவுடன்" ஹேக்கிங் செய்பவர்கள் தங்கள் ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளும் பாஜகவை பிடிக்காதவர்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்திருப்பதாக கூறியிருக்கும் அரசாங்கம், எதிர்க்கட்சி எம்பிக்களின் கூற்றுக்களை நிராகரித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "இது போன்ற அச்சுறுத்தல் எச்சரிக்கைகள் 150 நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. எனவே, இவை தவறான எச்சரிக்கைகளாக இருக்கலாம்." என்று கூறியுள்ளார்.
க்ஜ்கள்
'மக்களை திசை திருப்பும் முயற்சி இது': எதிர்கட்சிகளை சாடிய மத்திய அமைச்சர்
மேலும், இந்த மெசேஜ் குறித்து விரிவான விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த எச்சரிக்கைகளை பெற்றவர்களும் ஆப்பிள் நிறுவனமும் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அஷ்வினி வைஷ்ணவ் கேட்டு கொண்டார்.
"இந்த நிர்ப்பந்தமான விமர்சகர்கள்... அவர்களுக்கு பெரிய பிரச்சினை இல்லாதபோது, அவர்கள் இதுபோன்ற விஷயங்களை செய்கிறார்கள். அவர்கள் பிரதமர் மோடியின் தலைமையில் நடக்கும் முன்னேற்றத்திலிருந்து மக்களை திசை திருப்ப விரும்புகிறார்கள்." என்றும் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா(யுபிடி) தலைவர் பிரியங்கா சதுர்வேதி, எம்பி அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் தலைவர் சசி தரூர் உள்ளிட்டோர் தங்களுக்கு ஹேக்கிங் எச்சரிக்கை மெசேஜ் வந்ததாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், மத்திய அரசு அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளது.