
டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு
செய்தி முன்னோட்டம்
டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு தமிழகத்தில் அடுக்குமாடி கட்டடங்களின் முத்திரை தீர்வை கட்டணங்கள், வரும் டிசம்பர் 1 முதல் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் மேலும் சில மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "தமிழகத்தில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவில் 2 ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது".
"அடிநிலம் பொறுத்து பிரிக்கப்படாத பாகத்துக்கு கிரையமாக ஓர் ஆவணமாகவும் கட்டிடப் பகுதியை பொறுத்து கட்டுமான உடன்படிக்கையாக ஓர் ஆவணமாகவும் பதியப்படுகிறது".
"குடியிருப்புகள் விற்பனையின்போது அடிநிலம், கட்டிடம் சார்ந்த பகுதிக்கு ஒரே விலையே நிர்ணயிக்கப்படுகிறது".
card 2
குறைக்கப்படும் பதிவுக்கட்டணம்
அந்த அறிக்கையில், "கட்டிடங்களை விற்பனை ஆவணமாக பதிவு செய்யாமல், கட்டுமான உடன்படிக்கை ஆவணமாக பதியும் வழக்கமும் உள்ளது. இந்த பரிவர்த்தனையில், விற்பனை ஆவணத்துக்கு 7 சதவீத முத்திரைத் தீர்வை, 2 சதவீத பதிவுக்கட்டணமும், கட்டுமான உடன்படிக்கைக்கு 1 சதவீத முத்திரைத் தீர்வை, 3 சதவீதம் பதிவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது".
"தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவில், கட்டிடம், அடிநிலம் சேர்த்த கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, இம்மதிப்பு மொத்த கட்டிட பரப்பை பொறுத்து கணக்கிடப்பட்டு, அதன்படி விற்பனை ஆவணமாகவே பதியப்படுகிறது. மற்ற மாநிலங்களில் உள்ள இம்முறையை தமிழகத்திலும் பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
card 3
பதிவுத்துறை தலைவரின் பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு
இதுதொடர்பாக, பதிவுத்துறை தலைவர் அனுப்பிய முன்மொழிவை பரிசீலித்த தமிழக அரசு,அடுக்குமாடி குடியிருப்புகளை பதியும்போது இனி பிரிபடாத பாகநிலம், கட்டிடம் என இரு ஆவணங்கள் பதியப்படுவதை மாற்றி, கட்டிடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பு அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாக பதியும் நடைமுறையை நடைமுறைப்படுத்தவும், புதிய குடியிருப்புகள் பதிவுக்கான முத்திரைத் தீர்வையை குறைக்கவும் முடிவெடுத்துள்ளது.
அதன்படி, மதிப்பு ரூ.50லட்சம் வரையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7% இருந்து 4%வும், ரூ.50லட்சம் முதல் ரூ.3கோடி வரையிலான குடியிருப்புக்கு முத்திரைத்தீர்வையை 7% இருந்து 5%வும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், ரூ.50 லட்சம் வரையிலான குடியிருப்பு வாங்குவோர் முத்திரைத் தீர்வை 4%, பதிவுக் கட்டணம் 2% என, 6 சதவீதம் செலுத்தினால் போதும்.
card 4
மறுவிற்பனைக்கு பொருந்தாது எனவும் அறிவிப்பு
அதேபோல், ரூ.50 லட்சம் முதல்ரூ.3 கோடி வரை மதிப்புள்ள குடியிருப்பு வாங்குவோர் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் என 7 சதவீதம் செலுத்தினால் போதும்.
இந்த சலுகை, பிரிக்கப்படாத பாக மனையுடன் பதியப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் பொருந்தும்.
மேலும், குடியிருப்புகளின் முதல் விற்பனைக்கு மட்டுமே இது பொருந்தும். மறு விற்பனைக்கு பொருந்தாது.
கூட்டுமதிப்பில் முத்திரைத்தீர்வை சலுகையுடன் பதியும் புதிய நடைமுறை டிச.1 முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே கட்டுமான ஒப்பந்த ஆவணமாக பதியப்பட்டுள்ள குடியிருப்புகளை மறு விற்பனை செய்வது தற்போதுபதிவுத்துறையால் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த அனுமதி டிசம்பர் 1-க்கு பிறகு, பதியப்படும் கட்டுமான ஒப்பந்த ஆவணங்களை பொறுத்து விலக்கிக் கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.