தமிழ்நாட்டில் மதமாற்றம் செய்யப்படுகிறதா: உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு
மத்திய, மாநில அரசுகள் மதமாற்றத்திற்கு தடை விதிக்கும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவுக்கான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. பாஜக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தஞ்சாவூரில் தற்கொலை செய்துகொண்ட 17 வயது மாணவி லாவண்யாவின் மரணத்தை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். பரிசு பொருட்கள் அளித்தும், மிரட்டியும் மதமாற்றம் செய்யப்படுவது மத்திய, மாநில அரசுகளால் தடுக்கப்பட வேண்டும். மதமாற்ற தடை சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்ற வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு கூறி இருப்பதாவது:
மாணவி லாவண்யாவின் மரணத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. விடுதி காப்பாளர் வழங்கிய கூடுதல் வேலைகளால் தான் லாவண்யா தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது தற்கொலை குறிப்பில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. மாணவின் தற்கொலையை மனுதாரர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முயல்கிறார். என்ன சட்டம் இயற்ற வேண்டும் என்பதை சட்டமன்றத்திடம் விட்டுவிடுங்கள். எந்த மாதிரியான சட்டம் வேண்டும் என்பதையும் எது வேண்டாம் என்பதையும் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் மதமாற்றம் செய்யப்படுகிறது என்று வெளியானது பொய்யான தகவலாகும். மத ரீதியாக தூண்டப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.