'இந்தியா உச்சி மாநாடு குழப்பங்கள் நிறைந்தது': ஆந்த்ரோபிக் CEO டேரியோ அமோடெய் கருத்தால் வெடித்த சர்ச்சை
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புது டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா ஏஐ உச்சி மாநாடு' (India AI Summit) குறித்து முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக்கின் முதன்மை நிர்வாக அதிகாரி டேரியோ அமோடெய் தெரிவித்த கருத்து, தற்பொழுது இந்திய அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ப்ளூம்பெர்க் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் டேரியோ அமோடெய், உலகளாவிய தலைவர்கள் பங்கேற்ற அந்த மாநாடு "மிகவும் ஒழுங்கற்ற முறையில்" நடத்தப்பட்டதாக குறிப்பிட்டதே இந்த சர்ச்சைக்கு காரணமாகும்.
தருணம்
மேடையில் நேர்ந்த 'அந்த' சங்கடமான தருணம்
உலகெங்கிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஏஐ தலைவர்கள் மற்றும் CEO-க்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் டேரியோ அமோடெய் ஆகிய இருவரும் மேடையில் மற்ற தொழில்நுட்பத் தலைவர்களை போல பரஸ்பரம் கைகளை கோர்த்து புகைப்படம் எடுக்க தவிர்த்தனர். முன்னதாக, டேரியோ அமோடெய் ஓபன்ஏஐ நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர் என்பதும், பின்னர் கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறி தனது சொந்த நிறுவனமான ஆந்த்ரோபிக்கை தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
"குழப்பங்கள் நிறைந்த திட்டமிடல்"
"அங்கு நடந்தது என்னவென்றால், அந்த உச்சி மாநாடு மிகவும் ஒழுங்கற்ற முறையில் திட்டமிடப்பட்டிருந்தது. கடைசி நிமிடத்தில் நாங்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டோம், நாங்கள் நிற்கும் வரிசையையும் அவர்கள் திடீரென மாற்றினர். பின்னர் எங்களை வலுக்கட்டாயமாக கைகளைக் கோர்த்துப் புகைப்படம் எடுக்குமாறு கூறினர்". "நான் குறிப்பாக இந்தியாவைப் பற்றி எந்தக் குறையும் கூறவில்லை. பொதுவாகப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இதுபோன்ற சர்வதேச உச்சி மாநாடுகள் எல்லாமே இப்படித்தான் மிகக் கடுமையான குழப்பங்களுடன்தான் நடக்கும். இதுபோன்ற மாநாடுகளுக்குச் சென்றவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்" என ஆந்த்ரோபிக் சிஇஓ டேரியோ அமோடெய் தெரிவித்தார்.
அரசியல் மோதல்
காங்கிரஸ் - பாஜக இடையே வெடித்த அரசியல் மோதல்
டேரியோ அமோடெயின் இந்த வீடியோ நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் எக்ஸ் (X) தளத்தில் மாறி மாறி விமர்சித்துக் கொண்டுள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்து விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, இந்த மாநாட்டை வெறும் விளம்பர உத்தி என்று சாடியுள்ளார். "இந்தியா தனது செயற்கை நுண்ணறிவு தலைமையை உலகிற்கு வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலாக உலகிற்குப் போலிப் பிம்ப மேலாண்மையும், உண்மையான நிர்வாகக் குளறுபடிகளும்தான் காட்சியளித்தன. அரசின் விளம்பர இயந்திரம் அதிவேகமாக ஓடலாம், ஆனால் அதன் ஆளுமை மென்பொருள் தொடர்ந்து செயலிழந்து வருகிறது" என்று அவர் விமர்சித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Anthropic CEO’s comments have exposed BJP’s hollow PR exercise.
— Abhishek Singhvi (@DrAMSinghvi) June 19, 2026
India was supposed to showcase its Artificial Intelligence leadership. Instead, the world got a glimpse of Artificial Image Management and real event mismanagement. The Government’s PR engine may be running at full…
பதிலடி
எடிட் செய்யப்பட்ட வீடியோ என பாஜக பதிலடி
காங்கிரஸின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மால்வியா, காங்கிரஸ் கட்சி தங்களுக்குச் சாதகமாக வீடியோவை எடிட் செய்து பகிர்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதையே வழக்கமாகக் கொண்ட காங்கிரஸ், டேரியோ அமோடெய் 'இந்தியாவை மட்டும் நான் குறைகூறவில்லை' என்று அளித்த விளக்கப் பகுதியைத் திட்டமிட்டே வெட்டிவிட்டு, அரைகுறை வீடியோவை பரப்பி அரசியல் லாபம் தேட முயல்கிறது" என்று அவர் சாடியுள்ளார். உலகத் தலைவர்கள் பாராட்டிய ஒரு மாநாட்டை, இந்தியாவை அவமதிக்க காங்கிரஸ் பயன்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.