
அரசியலில் இறங்கும் மற்றுமொரு ராஜ வம்சம்: கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் யதுவீர் வாடியார்
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை, பாஜக நேற்று வெளியிட்டது.
அதில் சுவாரசியமாக இடம்பெற்றிருந்த ஒரு பெயர், மைசூரு மன்னர் பரம்பரையை சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத் சாமராஜ வாடியார்.
காரணம், அவர் களம்காணும் முதல் தேர்தல் இதுதான்.
அதிலேயே அவருக்கு நாடாளுமன்ற சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து புகை குப்பிகளை வீசிய நபர்களுக்கு பாஸ் வழங்கிய விவகாரத்தில் சிக்கிய பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு பதிலாக, மைசூரு மக்களவை தொகுதியில் பாஜக சார்பாக களமிறங்க இருப்பது, யதுவீர் வாடியார்.
இதன் மூலம், மக்கள் மத்தியில் அசைக்கமுடியாத இடத்தை பெற பாஜக திட்டமிட்டுள்ளது.
சரி, யார் இந்த யதுவீர்? தெரிந்துகொள்ளுங்கள்..
மைசூரு மன்னர்
MIT மாணவர் இந்த யதுவீர்
32 வயதான யதுவீர் மைசூரின் 25வது மற்றும் கடைசியாக ஆட்சி செய்த ஜெயராமச்சந்திர வாடியாரின் பேரன் ஆவார்.
யதுவீரின் மாமா ஸ்ரீகாந்ததத்த வாடியாரின் மனைவியான ப்ரோமோதா தேவி வாடியார், யதுவீரை தத்தெடுத்து, வளர்த்தனர்.
பெங்களூரு வித்யாநிகேதன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த யதுவீர், பின்னர் உயர்கல்விக்காக அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்.
ஆங்கில இலக்கியம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். விளையாட்டில் ஆர்வமுள்ள யதுவீர் டென்னிஸ் மற்றும் குதிரை பந்தய ஆர்வலராகவும் இருக்கிறார்.
அவர் ராஜஸ்தானின் துங்கர்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த திரிஷிகா குமாரி வாடியாரை மணந்தார்.
திரிஷிகாவின் தந்தை ஹர்ஷவர்தன் சிங்கும் பாஜக மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.