Page Loader
தேசிய பதவிக்கு ப்ரொமோட் ஆகும் அண்ணாமலை: மாநில பாஜக தலைவராக அவர் கடந்து வந்த பாதை 
தேசிய பதவிக்கு ப்ரொமோட் ஆகும் அண்ணாமலை

தேசிய பதவிக்கு ப்ரொமோட் ஆகும் அண்ணாமலை: மாநில பாஜக தலைவராக அவர் கடந்து வந்த பாதை 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2025
06:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக உள்ளார். அடுத்ததாக பாஜக மாநிலத் தலைமைக்கான தேர்தலில் நயினார் நாகேந்திரன் ஒரே வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் எனவும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக, அண்ணாமலை பதவியிலிருந்து விலகப்போகிறார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே டெல்லி பயணம் செய்த அண்ணாமலை,"மாநில தலைவர் பதவிக்கு நான் போட்டியிடபோவதில்லை. பாஜகவில் சாதாரண தொண்டனாக பணியாற்ற தயாராக இருக்கிறேன்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு தேசிய அளவில் பதவி கிடைக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் மாநில தலைவராக அண்ணாமலை கடந்து வந்த பாதையை பார்ப்போமா?

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தலைவர் 

கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே தலைவராக ப்ரோமோஷன்

2021ஆம் ஆண்டு ஜூலை 8ம் தேதி பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, அதற்கான சில மாதங்களுக்கு முன்பே பாஜகவில் இணைந்திருந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளர் இளங்கோவிடம் சுமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அண்ணாமலையின் தலைமையில், பாஜக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டு அமைத்தபோதிலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதுமட்டுமல்லாது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்தது, அதிமுகவுடன் கூட்டணியை உடைக்கத் தூண்டியதாகவும் கூறப்பட்டது. திமுகவுக்கு எதிரான அரசியல் பார்வையை வலுப்படுத்திய அவருடைய நடவடிக்கைகள் பாஜகவுக்குள் விவாதத்தையும், சவால்களையும் ஏற்படுத்தின. இருப்பினும் அவரது நடவடிக்கையால் தமிழகத்தில் பாஜக வாக்கு சதவிகிதம் உயர்ந்தது மறுப்பதற்கில்லை.

சர்ச்சை

அண்ணாமலை மீதான சர்ச்சைகளும் விமர்சனங்களும்

அண்ணாமலையின் சில நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களைச் சந்தித்தன. ரஃபேல் வாட்ச் விவகாரம், விமானத்தில் அவசர கதவைத் திறந்தது, சாட்டையால் அடித்த நிகழ்வு, "செருப்பு அணிய மாட்டேன்" என்ற சவால் என அனைத்துமே எதிர்க்கட்சிகளால் பரபரப்பாக விமர்சிக்கப்பட்டன. அதேபோல், முக்கிய தலைவர்களுடன் நட்பு வைக்காத அவரது இயல்பு, சிலரின் பார்வையில் பின்னடைவாகவே இருந்தது. அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலம், சாதனைகளும் சர்ச்சைகளும் கலந்து இருந்த ஓர் அதிரடியான பயணமாக அமைந்தது.