
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை கருத்து
செய்தி முன்னோட்டம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று(நவ.,2) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், 'மக்களை மேம்படுத்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது" என்றும்,
"மக்களுக்கு எப்பொழுதும் சாய்ஸ் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்" என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 'நான் யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன் என்பதை முதலிலேயே கூறி விட்டேன். புதிதாக வருபவர்கள் தங்கள் கருத்துக்களை மக்களிடம் எடுத்து கூறட்டும், அது பிடித்திருந்தால் அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்' என்று தெரிவித்தார்.
அரசியல்
'மக்கள் எடுக்கும் இறுதி முடிவினை ஏற்றுக்கொள்ள வேண்டும்' - அண்ணாமலை
மேலும், 3 கட்சிகள் இருக்கும் மாநிலத்தில் 6 கட்சிகள் போட்டிபோட இருந்தால் அது நல்லது தான். மக்கள் தங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்யட்டும் என்றும் பேசியுள்ளார்.
'அந்த வகையில் புதியவர்கள் வந்தால் தான் தற்போதுள்ள அரசியல் நடைமுறைகள் மாறும்' என்றும்,
'புதியவர்கள் வருகை தரும் பட்சத்தில் சிஸ்டம் மாறும்' என்றும் தனது கருத்துக்களை கூறியுள்ளார்.
புதியவர்கள் தங்கள் மாற்று கருத்துக்களை பதிவு செய்தால் தான் 30-40 ஆண்டுகளாக ஆட்சிக்கு மாறி மாறி வரும் பழைய கட்சிகளின் தேங்கிய நிலை மாறும், மக்கள் எடுக்கும் இறுதி முடிவினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசியுள்ளார்.