அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைதானவர் யார்?
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வழக்கில், நடைபாதையில் பிரியாணி கடை வைத்துள்ள 37 வயதான வியாபாரி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கைபடி, ஞானசேகரன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு முன்னரும் இதுபோல வளாகத்தில் அத்துமீறி நுழைந்து மாணவிகளை புகைப்படம் எடுப்பதும், அதை வைத்து மிரட்டுவதும் வாடிக்கையாக வைத்திருந்ததை விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் மீது ஏற்கனவே 15 கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளதெனவும் தெரியவந்துள்ளது.
காவல்துறை அறிக்கைபடி, வழக்கின் விபரம்
23.12.2024 அன்று, கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்தின் பின்னால் பேசிக் கொண்டிருந்தபோது, அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் அவர்களை அச்சுறுத்தி, பின்னர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. AWPS-ல் பதிவான இந்த வழக்கில், பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணைகளை துவங்கியது. கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.