சென்னை - அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி
சென்னை - தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக மற்றும் அதிமுக கட்சியினர் உள்பட பலர் அண்ணாவின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியும் நடத்தப்பட்டது. இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியம். எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த அமைதி பேரணியானது வாலாஜா சாலையில் துவங்கப்பட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா சதுக்கத்தில் நிறைவடைந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
வாழும் போது மட்டுமல்லாமல் தனது இறுதி ஊர்வலத்திலும் சாதனை படைத்த அண்ணா
நடைபெற்ற பேரணியின் நிறைவாக அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது. பெரியாரின் சீடராக இருந்த அண்ணா சில கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்துச்சென்று 'திராவிட முன்னேற்ற கழகம்' என்னும் தனி கட்சியினை துவங்கினார். எனினும் தான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவன் என்று பெரியாருக்கு மகுடம் சூட்டி, அவருக்கென தலைவர் நாற்காலியை ஒதுக்கியவர். வாழும் போது பல சாதனைகளை செய்த அறிஞர் அண்ணா தனது இறப்பிலும் சரித்திரம் படைத்தவர். அவரது இறுதி ஊர்வலத்திற்கு திரண்ட மக்கள் கூட்டம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.