அஞ்சு ஸ்ரீபார்வதி மரணத்திற்கு பிரியாணி காரணமாக இல்லாமலும் இருக்கலாம்
கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்த 20 வயது மாணவி அஞ்சு ஸ்ரீபார்வதி சமீபத்தில் உயிரிழந்தார். கெட்டுப்போன பிரியாணியை உண்டதாலேயே இவர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. ஆனால், இதற்கு வேறு காரணம் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். காசர்கோடு போலீஸ் கமிஷனர் வைபவ் சக்சேனா கூறுகையில், "இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. உயிரிழந்தவரின் உள் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார். "கெட்டுப்போன உணவை உண்டதால் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையின் போது வேறு சில பொருட்களையும் கண்டுபிடித்துள்ளனர்" என்றும் அவர் கூறி இருக்கிறார்.
தற்கொலையாக இருக்குமா?
இந்த வழக்கில் உயிரிழிந்த அஞ்சு ஸ்ரீபார்வதியின் தற்கொலை கடிதம் கிடைத்திருப்பதாக சில செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது குறித்து போலீஸார் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. காசர்கோடு அருகே உள்ள பெரும்பாளையைச் சேர்ந்த அஞ்சு ஸ்ரீபார்வதி, டிசம்பர் 31ஆம் தேதி காசர்கோட்டில் உள்ள ரோமன்சியா என்ற உணவகத்தில் வாங்கிய குழி மண்டி என்னும் ஒருவித பிரியாணியை உண்டார். அந்த உணவை உட்கொண்ட அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அன்றிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின், ஜனவரி 7ஆம் தேதி சனிக்கிழமை அன்று உயிரிழந்தார். மேலும், கெட்டுப்போன பிரியாணியை உண்டதே இவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், பிரியாணி சாப்பிட்டு ஃபுட்பாய்சனிங் ஏற்பட்டதால் இப்பெண் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று கூடுதல் விசாரணை நடந்து வருகிறது.