Page Loader
8 பேர் பலி; 200 ஆண்டு இல்லாத கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா
ஆந்திராவில் 200 ஆண்டுகள் இல்லாத அளவில் பெய்துவரும் கனமழை

8 பேர் பலி; 200 ஆண்டு இல்லாத கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா

எழுதியவர் Sekar Chinnappan
Sep 01, 2024
04:31 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமான வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு முதல் 8 பேர் பலியாகியுள்ளனர். வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்துவரும் இடைவிடாத மற்றும் தொடர் மழை, வெள்ளிக்கிழமை இரவு முதல் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில், குறிப்பாக விஜயவாடாவில் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. விஜயவாடாவில் உள்ள சுன்னப்புபட்டிலா சென்டரில் உள்ள வீட்டின் மீது பாறாங்கல் ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். குண்டூர் மாவட்டம் உப்பலபாடு என்ற இடத்தில் ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்களை காருடன் வெள்ளம் அடித்துச் சென்ற மற்றொரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், மங்களகிரி கந்தலய்யபேட்டாவில் மற்றொரு நிலச்சரிவில் மூதாட்டி உயிரிழந்தார்.

விஜயவாடா

விஜயவாடாவில் வரலாறு காணாத மழைப்பொழிவு

மொகலராஜபுரம் என்ற ஒரு நகரத்தில், குறிப்பாக பென்ஸ் சர்க்கிள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடும் தண்ணீர் தேங்கியது. இதனால் 24 மணிநேரம் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியது. ஆந்திராவின் பிரபல வானிலை நிபுணர் கே பிரனீத் கூறுகையில், விஜயவாடா நகரின் கிழக்குப் பகுதியில் பென்ஸ் வட்டத்தில் 161 மிமீ மற்றும் விமான நிலையத்தில் 123 மிமீ மழை பெய்துள்ளது என்றும், இது கடந்த 200 ஆண்டுகளில் ஆகஸ்டில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல், தாடேபள்ளி பகுதியில் 121 மிமீ மழையும், மங்களகிரியில் 118 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விசாகப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் அருகே கோபால்புரம் பகுதியில் நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை நிலவரம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசிய முதல்வர், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.