ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில், கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அமாவாசை நாள் என்பதாலும், வைகுண்ட ஏகாதேசி இன்று தொடங்குகிறது என்பதாலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் இன்று வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணி அளவில், கோயிலுக்குள் குழுவாக வந்த ஆந்திராவைச் சேர்ந்த 30 ஐயப்ப பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா, சாமியே சரணம் ஐயப்பா உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட தனியார் அமைப்பைச் சேர்ந்த பாதுகாவலர்கள், அவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது.
கோவிலுக்குள் ரத்தம் சிந்தியதால் பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது
பாதுகாவலர்கள் கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியது. இந்நிலையில், பரத் உள்ளிட்ட மூன்று பாதுகாவலர்கள் இணைந்து, சென்னா ராவ் என்ற பக்தரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ராவின் மூக்கு உடைந்து ரத்தம் சொட்டியது. இதனால் கருவறைக்கு முன் உள்ள காயத்ரி மண்டபத்திலேயே, ரத்தம் சொட்ட சொட்ட அவர் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் வெளியேற்றப்பட்டு, கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, காலை 10 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதற்கிடையே, சென்னா ராவ் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பாதுகாவலர்கள் மீதும், பாதுகாவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் பக்தர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் மீது பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தியதற்காக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக காட்டமான ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் "இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை" என பதிவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் இத்திமிரே, கோவில் நிர்வாகத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என பாஜக கூறுவதற்கு பல காரணங்களில் ஒன்றாகும் என கூறியுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட பாஜக சார்பில், ஸ்ரீரங்கம் கோயில் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்
கோவிலுக்குள் வந்த ஆந்திர மாநில பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன், அங்கிருந்த உண்டியலை பிடித்து ஆட்டிக்கொண்டு இருந்ததாகவும், மேலும், தட்டி கேட்ட பாதுகாவலரின் முடியை பிடித்து அருகில் இருந்த உண்டியலில் மோத செய்ததாகவும், மற்ற பக்தர்கள் யாரையும் தரிசனம் செய்ய விடாமல் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், கோவில் நிர்வாகம் சார்பில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.