ShakthiSAT செயற்கைக்கோள் திட்டத்திற்குத் தேர்வு; 14 வயது அரசு பள்ளி மாணவி சாதனை
செய்தி முன்னோட்டம்
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான கந்துலா ஜெஸ்ஸி என்ற அரசுப் பள்ளி மாணவி, சர்வதேச விண்வெளித் திட்டமான மிஷன் சக்திசாட் (Mission ShakthiSAT) செயற்கைக்கோள் உருவாக்கக் குழுவில் பங்கேற்கத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார். வறுமை மற்றும் பொருளாதார சூழல் காரணமாக, தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்ட இந்த மாணவி, தற்போது நாட்டின் முன்னணி விண்வெளி விஞ்ஞானியாக உருவெடுக்கும் பாதையில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.
ஆந்திர மாணவி
உலக அளவில் 108 நாடுகளிலிருந்து தேர்வான ஒரே ஆந்திர மாணவி
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் தலைவரும், இஸ்ரோ மற்றும் நாசாவின் தூதருமான டாக்டர் ஸ்ரீமதி கேசன் தலைமையில் சக்திசாட் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
உலகின் முதல் அனைத்து மகளிர் நிலவு கியூப்சாட் திட்டமான இதில் பங்கேற்க, உலகம் முழுவதிலும் உள்ள 108 நாடுகளிலிருந்து சுமார் 12,000 மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்தியாவில் இருந்து தேர்வான 20 பேரில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வாகியுள்ள ஒரே மாணவி ஜெஸ்ஸி மட்டுமே ஆவார்.
பயிற்சி
ஆசிரியர் அளித்த ஊக்கமும் தீவிரப் பயிற்சியும்
ஜெஸ்ஸியின் இந்த வரலாற்று சாதனைக்கு அவரது இயற்பியல் ஆசிரியை மணிமாலா முக்கியக் காரணமாக இருந்துள்ளார்.
2025 மே மாதம் இதைப் பற்றி அறிந்த ஆசிரியை, ஜெஸ்ஸியை இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வைத்துள்ளார்.
தொடர்ந்து செயற்கைக்கோள் அமைப்புகள், உந்துவிசை, தெர்மோடைனமிக்ஸ் உள்ளிட்ட கடினமான விண்வெளி அறிவியல் பாடங்கள் கொண்ட 550 ஆன்லைன் வகுப்புகளை ஜெஸ்ஸி தீவிரமாகப் பயின்று, சர்வதேச விஞ்ஞானிகள் நடத்திய நேர்காணல் மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார்.
செயற்கைக்கோள்
அக்டோபர் 11 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் செயற்கைக்கோள்
வரும் ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினத்தன்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட பயிற்சியில், 108 நாடுகளை சேர்ந்த மாணவிகளுடன் இணைந்து ஜெஸ்ஸி செயற்கைக்கோள் வடிவமைப்பில் ஈடுபடுவார்.
இந்த மாணவர் தயாரிப்பு நிலவு செயற்கைக்கோள் வரும் அக்டோபர் 11 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்படவுள்ளது.
எதிர்காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானியாக மாறுவதே தனது லட்சியம் என மாணவி ஜெஸ்ஸி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.