அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்-தமிழக டிஜிபி'க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது. அங்கு தங்கியிருந்த ஆதரவற்றோர், மனநலம் சரியில்லாதோரை கொடுமை செய்வதாகவும், மர்மமான முறையில் அங்கு தங்கியுள்ளோர் காணாமல் போவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி அதில் சம்பந்தப்பட்டோரை கைதுசெய்து 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும் செய்துள்ளது. இதுதொடர்பாக செய்திகள் வெளிவந்த நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்த துவங்கியது. ஏற்கனவே இதுகுறித்து தமிழகஅரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து தமிழ்நாடு தலைமை செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி'க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நான்கு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அதன்படி, இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த விரிவான அறிக்கையினை நான்கு வார காலத்திற்குள் அளிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் யாருக்கேனும் நிவாரணம் அளிக்கப்பட்டிருந்தால் அது குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறை தனிப்படை அமைத்து அந்த ஆசிரமத்திற்கு நேரில் சென்று விரிவான விசாரணையினை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் இந்த விசாரணையானது நேர்மையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.