அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம்
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது. அங்கு தங்கியிருந்த ஆதரவற்றோர், மனநலம் சரியில்லாதோரை கொடுமை செய்வதாகவும், மர்மமான முறையில் அங்கு தங்கியுள்ளார் காணாமல் போவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து கெடார் போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு தங்கியிருந்தோரை கட்டிவைத்து சித்திரவதை செய்தல், போதை மருந்து அளித்தல், பெண்களை பலாத்காரம் செய்தல், உள்நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்தல் போன்றவைகள் அரங்கேறியது தெரியவந்துள்ளது. அதன்படி, அந்த ஆசிரமத்தின் உரிமையாளர், அவரது மனைவி உள்பட மேலும் சில பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி விசாரணை
இதனையடுத்து போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியானதை பார்த்து தாமாக முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று(பிப்.,22) இவ்வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் காப்பகம் தொடர்பான அனைத்து விவரங்களையும் விசாரித்தார். பின்னர் இது குறித்த விரிவான அறிக்கையினை 6 வாரத்தில் அளிக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.