அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
செய்தி முன்னோட்டம்
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.
இங்கு மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் இங்கு தங்கவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சாலைகளில் திரியும் மனநல பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோரை அழைத்து வந்து சிகிச்சையளித்து அவர்களது குடும்பத்தாருடன் சேர்த்து வைப்பதே இவர்களது பணியாக இருந்துவந்தது என கூறப்படுகிறது.
இதன் உரிமையாளர் ஜூபின் பேபி(45), கேரளாவை சேர்ந்தவர்.
இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் திருப்பூரை சேர்ந்த ஜாபருல்லா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் அவர் திடீரென மாயமானநிலையில் அவரது உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்கள்.
இதன்பேரில் துவங்கிய விசாரணையில் இந்த ஆசிரமம் குறித்த பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
9 பேர் கைது
மீட்கப்பட்டோரில் 60 பேர் வேறு காப்பகங்களில் பத்திரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கெடார் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் அங்கு தங்கியிருந்தோரை கட்டிவைத்து சித்திரவதை செய்தல், போதை மருந்து அளித்தல், பெண்களை பலாத்காரம் செய்தல், உள்நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்தல் போன்றவைகள் அரங்கேறியது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, அந்த ஆசிரமத்தின் உரிமையாளர், அவரது மனைவி உள்பட மேலும் சில பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டோரில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 203 பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களுள் குணமடைந்த 60 பேர் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடவேண்டியவை.