
அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
விழுப்புரம், கெடார் அருகே அன்புஜோதி என்னும் ஆசிரமம் 18ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.
அங்கு தங்கியிருந்த ஆதரவற்றோர், மனநலம் சரியில்லாதோரை கொடுமைசெய்வதாகவும், மர்மமான முறையில் அங்கு தங்கியுள்ளோர் காணாமல் போவதாகவும் புகார்கள் எழுந்தது.
பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர்.ஆனந்த் அவர்கள் தலைமையிலான குழுவினர் டெல்லியில் இருந்துவந்து இன்று(மார்ச்.,14)அதிரடி ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து இவ்வழக்கினை விசாரித்துவரும் சிபிசிஐடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனியிடமும் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து ஆசிரமத்திலிருந்து காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோரையும் நேரில்சென்று சந்தித்து விசாரணை நடத்தியுள்ளது இந்த குழு.
அதன்பின்னர் ஆசிரமத்தில் அதன் உரிமையாளர் அறை மற்றும் மனநலம் குன்றியோரை தங்கவைத்திருந்த அறையினையும் மூடி,சீல் வைத்துள்ளனர்.
டாக்டர் ஆனந்த்
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் 35 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல்
இது குறித்து டாக்டர் ஆனந்த் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து டெல்லியிலிருந்து மூன்று குழுக்களாக கள ஆய்வினை மேற்கொள்ள நாங்கள் வந்துள்ளோம்.
இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தோருக்கு செயற்கையான முறையில் போதை பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் 35 ஆயிரம் மாத்திரைகள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது எங்கிருந்து வாங்கப்பட்டது என விசாரித்து வருகிறோம். இன்னும் 15 நாட்களில் தங்களிடமிருந்து வாங்கப்பட்டதா என கூறுவதாக முண்டியம்பாக்கம் மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.
மேலும் இரவு நேரங்களில் டார்க் ரூம் என்னும் இருட்டு அறையில் அழைத்து சென்று உடல்நிலை சரியாகிவிட கூடும் என கூறி ஜெபம் செய்து மத மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று டாக்டர் ஆனந்த் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.