பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை
தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை தடுப்பது குறித்த கூட்டம் இன்று(மே.,18)தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயலாளர்கள் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் தாக்காத வகையில், மனித உடலின் நீர்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீரினை குடிக்க வேண்டும். அவசியமான பணிகளுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது குடிநீரினை கையோடு எடுத்து செல்ல வேண்டும். ஓ.ஆர்.எஸ்., இளநீர், மோர், எலுமிச்சை மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றினை குடிக்க வேண்டும். இந்த பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
மேலும், வெயில் காலங்களில் காலணி அணியாமல் வெறுங்காலுடன் செல்ல கூடாது. சிறிய குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் அதிக வெப்பத்தில் மதிய வேளையில் அதாவது 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தலைமை செயலாளர் பேசுகையில், இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவிரிவான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த அறிவுரைகள் அனைத்தையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தொகுத்து அனைத்து துறைகளுக்கும் வழங்க வேண்டும். தொடர்ச்சியான ஆய்வுக்கூட்டங்கள் மூலம் இவை பின்பற்றப்படுகின்றனவா என்பதனையும் கண்காணித்திட வேண்டியதன் அவசியத்தையும் தலைமை செயலாளர் இறையன்பு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.