கேரளா நிலச்சரிவு: பினராயி விஜயன் vs அமித் ஷா கூறுவது என்ன?
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து மாநில அரசிற்கு முன்கூட்டியே எச்சரித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். திருவனந்தபுரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன்,"பருவநிலை மாற்றம் தொடர்பான கடுமையான சிக்கல்கள் உள்ளன என்பதை மத்திய அரசும் உணர வேண்டும். கடந்த காலங்களில், இப்போது நாம் பார்ப்பது போல் அதிக மழை பெய்ததை பார்த்திருக்கிறோமா?" "நமக்கு காலநிலை மாற்றத்தினை தணிக்கும் முயற்சிகள் தேவை. இது போன்ற ஏதாவது இயற்கை பேரிடர் நடந்தால், நீங்கள் மற்றவர்களின் மீது பழியை சுமத்த முயற்சிக்க கூடாது. நான் சொன்னது போல், இது பழி போடும் நேரம் இல்லை" என்றார்.
அமித்ஷா கூறியது என்ன?
ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த ஜூலை 23 அன்று கேரள அரசுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறினார். "2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசு ரூ.2,000 கோடிக்கு மேல் முன்னெச்சரிக்கை அமைப்பை உருவாக்க செலவிட்டுள்ளது. சம்பவத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்பும், ஜூலை 24-ம் தேதியும் கேரள அரசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்றார். "அதோடு ஜூலை-25, ஜூலை-26 அன்று, 20 செ.மீ.க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரித்தோம்" என்று அமித்ஷா கூறினார். மேலும் ஜூலை 23 அன்று, நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு ஒன்பது NDRF குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டதாக உள்துறை அமைச்சர் கூறினார்.
முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுவது என்ன?
இது குறித்து பினராயி விஜயன் கூறுகையில், வயநாட்டில் 115-204 மி.மீ மழை பெய்யும் என்று மத்திய அரசின் வானிலை எச்சரிக்கை தெரிவித்தது. ஆனால் அடுத்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட அன்று ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். "சோகம் நிகழும் முன், ஒருமுறை கூட, அப்பகுதியில் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே, அன்று காலை, 6 மணிக்கு, ரெட் அலர்ட் விடுத்தனர்," என்றார். ஜூலை 29 அன்று, இந்திய புவியியல் ஆய்வு மையம், ஜூலை-30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறிய நிலச்சரிவு அல்லது பாறை வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது என்றார் முதல்வர் பினராயி விஜயன்.