LOADING...
திருமணமானவர் லிவ்-இன் உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளது

திருமணமானவர் லிவ்-இன் உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 27, 2026
05:50 pm

செய்தி முன்னோட்டம்

திருமணமான ஒரு ஆண், மற்றொரு பெண்ணுடன் பரஸ்பர சம்மதத்துடன் 'லிவ்-இன்' உறவில் இருப்பது சட்டப்படி குற்றமல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளது. சமூக ஒழுக்க நெறிகளை விட, குடிமக்களின் தனிநபர் உரிமைகளை பாதுகாப்பதே நீதிமன்றத்தின் கடமை என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த அனாமிகா மற்றும் நெத்ரபால் ஆகிய இருவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. திருமணமான நெத்ரபாலுடன் அனாமிகா தனது சுய விருப்பத்தின் பேரில் வாழ்ந்து வருகிறார். ஆனால், அனாமிகாவின் குடும்பத்தினர் தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், நெத்ரபால் மீது கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

கருத்து

நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துக்கள்

நீதிபதிகள் ஜே.ஜே.முனீர் மற்றும் தருண் சக்சேனா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் படி, "ஒரு வயது வந்த ஆண் மற்றும் பெண் தங்களது முழுச் சம்மதத்துடன் இணைந்து வாழ்வது சட்டப்படி எந்தக் குற்றப்பிரிவின் கீழும் வராது. இதில் ஒருவர் திருமணமானவராக இருந்தாலும் அது சட்டப்படி தண்டனைக்குரியது அல்ல". இணைந்து வாழும் இரு வயது வந்த நபர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது காவல்துறையின் கடமை. இதில் மெத்தனம் காட்டிய ஷாஜஹான்பூர் எஸ்பி (SP), அந்த ஜோடியின் பாதுகாப்பிற்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் கூறுகிறது.

உத்தரவு

நீதிமன்ற உத்தரவு

மனுதாரர்களை கடத்தல் வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், அவர்களுக்கு உடனடிப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. மேலும், அனாமிகாவின் குடும்பத்தினர் அந்த ஜோடியைத் தொடர்பு கொள்ளவோ அல்லது அவர்களின் வசிப்பிடத்திற்குச் செல்லவோ கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement