பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு
புயல் பாதிப்புகள் காரணமாக, அண்ணா பல்கலைகழகம் மற்றும் சென்னை பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை(டிச.05) நடைபெறவிருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் சென்னைக்கு வடகிழக்கே 90 கிமீ தூரத்தில் உள்ள மிக்ஜாம் புயல் 8 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இன்டர்நெட், தொலை தொடர்புகள் மற்றும் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் திண்டாடி வருகின்றனர்.
4 மாவட்டத்திற்கு பொது விடுமுறை
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது. மேலும், இராணிபேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக, நாளை முதல் வரும் சனிக்கிழமை(டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழங்களும் அறிவித்துள்ளன. அண்ணா பல்கழைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் நேரடி கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.