இனி விமான பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் செக்-இன் செய்யலாம்
மெட்ரோ ரயில் வந்த பிறகு, விமான நிலையம் செல்வோர் மிக எளிதாக சென்றடைகிறார்கள். இந்நிலையில் விமான பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த மெட்ரோ சார்பில் ஓர் புதுவித வசதியை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தப்படியே விமான நிலையத்தில் செக்-இன் செய்யும் வசதி சாத்தியப்படுமா என்பது குறித்து ஆராய்வதற்காக கிக்-ஆப் கூட்டம் மீனம்பாக்கத்தில் நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் மெட்ரோ ரயில் அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்ச் மாதம் முதல் சோதனை முயற்சி துவக்கம்
அதன்படி, சோதனை அடிப்படையிலேயே முதலில் இந்த வசதி கொண்டுவரப்படவுள்ளது. இந்த வசதி சாத்தியமாகும் பட்சத்தில், விமான நிலையங்களில் விமானம் புறப்படும் நேரத்தில் ஏற்படும் பயணிகளின் கூட்டம் மற்றும் சுமைகளை இந்த வசதி மூலம் குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் கவுண்டர்களில் உடைமைகளை சரிபார்த்த பின்னர் போர்டிங் பாஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதனை பெற்ற பயணிகள் நேராக விமானம் ஏறுவதற்கு செல்லலாம். இந்த சோதனை நடைமுறை மார்ச் மாதம் செயல்படுத்தப்படவுள்ளது. இதனையடுத்து, ஏப்ரல் 14ம் தேதி முதல் இந்த செக்-இன் வசதி முழுமையாக செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடவேண்டியது.