Loading...
நடுவானில் 300 அடி சட்டென சரிந்த ஏர் இந்தியா விமானம்: தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என சந்தேகம்
ஃபூகெட் நகரிலிருந்து டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் இந்த விபத்து நேரிட்டது

நடுவானில் 300 அடி சட்டென சரிந்த ஏர் இந்தியா விமானம்: தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என சந்தேகம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 11, 2026
07:51 am

செய்தி முன்னோட்டம்

ஆகஸ்ட் 4 அன்று, நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று திடீரென 300 அடி உயரத்தில் இருந்து கீழே சரிந்து விழுந்ததில், 17 பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாய்லாந்தின் ஃபூகெட் நகரிலிருந்து டெல்லி நோக்கி பயணித்த விமானத்தில் இந்த விபத்து நேரிட்டது. ஆரம்பத்தில் இந்த அசம்பாவிதத்திற்கு காற்றின் கொந்தளிப்பே காரணம் என ஏர் இந்தியா தெரிவித்திருந்தது. ஆனால், விமானத்தின் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகள் மற்றும் தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒரே நேரத்தில் செயலிழந்ததே இந்தத் திடீர் வீழ்ச்சிக்கு முதன்மை காரணம் என்பது தற்போதைய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தானியங்கி அமைப்பு முடங்கியதும், துணை விமானி விமானத்தை கையால் இயக்க முயன்றபோது கட்டுப்பாட்டு எச்சரிக்கைகள் தோன்றியதாக கூறப்படுகிறது.

நடவடிக்கை

சர்வதேச அளவில் தீவிர விசாரணை

இச்சம்பவத்தை 'மிகவும் தீவிரமானது' என வகைப்படுத்தியுள்ள இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB), சர்வதேச விதிகளின்படி விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் விமான விபத்து புலனாய்வு அமைப்பான 'BEA' மற்றும் ஏர்பஸ் நிறுவனத்தின் நிபுணர் குழுவினரும் இந்த விசாரணையில் இணைந்துள்ளனர்.

விமானத்தில் பயணித்த 137 பயணிகளில் 17 பேருக்கு முதுகெலும்பு மற்றும் விலாப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இதற்கிடையே விமான விபத்து நடைமுறைகளின்படி விமானப் பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், முதன்மை விமானியின் மாதிரி மேலதிக ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இறுதி அறிக்கை வரும் வரை இரு விமானிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT