ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன்
கடந்த நவம்பர் 26ம் தேதி, மும்பை தொழிலதிபர் சங்கர் மிஸ்ரா, ஏர் இந்தியாவின் விமானத்தில் பயணித்த போது குடிபோதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் முதலில் அளிக்கப்பட்ட புகாரின் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அப்பெண் நேரடியாக டாடா குழும தலைவர் சந்திரசேகருக்கு கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் போலீசில் புகார் அளித்ததையடுத்து மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா பெங்களூருவில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் வழங்கிய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ரா இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று மாலை அல்லது நாளை சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.