Loading...
சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகள் அக்டோபர் 24 வரை ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு
போர் பதற்றத்தால் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்டவை சவுதிக்கான விமானங்களை அக்.24 வரை ரத்து செய்துள்ளன.

சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகள் அக்டோபர் 24 வரை ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Oct 17, 2026
06:56 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, சவுதி அரேபியாவுக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களும் சவுதி நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்திருந்த நிலையில், இந்திய விமான நிறுவனங்களின் இந்த அதிரடி நடவடிக்கை சவுதி வாழ் இந்தியர்கள் மற்றும் புனிதப் பயணம் மேற்கொள்வோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான ரத்து நீட்டிப்பு

பதற்றத்தில் சவுதி நகரங்கள்

ஏமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் உள்ளிட்ட மக்கள் வசிப்பிடங்கள் மற்றும் முக்கியக் கட்டமைப்புகள் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து அங்குபோர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் காரணமாக, ஜித்தா, ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய நகரங்களுக்கான விமானபோக்குவரத்து சேவைகளை அக்டோபர் 24 வரை நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இண்டிகோ நிறுவனமும் அக்டோபர் 24 வரையிலும், ஆகாசா ஏர் நிறுவனம் ரியாத்துக்கான விமானங்களை அக். 24 வரையிலும், ஜித்தாவுக்கான விமானங்களை அக். 21 வரையிலும் ரத்து செய்துள்ளன.

தற்போது ரியாத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ள போதிலும், தம்மாம், ஜித்தா மற்றும் மதீனா விமான நிலையங்கள் குறைந்த அளவிலான தடங்கல்களுடன் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

ஆலோசனை

இந்தியத் தூதரகத்தின் ஆலோசனை

சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு ரியாத்தில் உள்ள இந்தியதூதரகம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 10 அன்று ரியாத் விமான நிலையத் தாக்குதலில் காயமடைந்த இந்தியர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், ஒருவர் அதிதீவிரக் கண்காணிப்பிலும், மூவர் பொது வார்டிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்படும் போது இந்தியர்கள் அனைவரும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உம்ரா புனிதபயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகள் விமான ரத்து மற்றும் பயண நீட்டிப்புகளைக் கருத்தில் கொண்டு தங்களது திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறும், அவசரமாக இந்தியா திரும்ப விரும்புவோர் பஹ்ரைன், குவைத், கத்தார் வழியாக விசா பெற்றுப் பயணிக்கலாம் என்றும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT