ஏர் இந்தியா AI-171 விபத்து: எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் கோளாறு இல்லை என மத்திய அரசு விளக்கம்
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு 260 பேரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா AI-171 விமான விபத்து தொடர்பான விசாரணையில், விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் (Locking Mechanism) எந்தவித கோளாறும் இல்லை என முதன்மை உபகரண உற்பத்தியாளர் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல், விமானத்தின் தகுதிச் சான்றை உறுதிப்படுத்தும் தொடர் ஆய்வுகளின் ஒரு பகுதியாக இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார். இதன் போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் கட்டமைப்பு மற்றும் அதன் பூட்டுதல் திறன் (Locking Detents) ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டதில், எந்தக் குறைபாடும் கண்டறியப்படவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆய்வு
சீயட்டிலில் தொடரும் 'த்ரஸ்ட் கண்ட்ரோல் மாடியூல்' ஆய்வு
சுவிட்ச் சோதனையில் எந்தக் கோளாறும் இல்லை எனத் தெரியவந்த போதிலும், விமானத்தின் முழுமையான 'த்ரஸ்ட் கண்ட்ரோல் மாடியூல்' பற்றிய விரிவான ஆய்வு அமெரிக்காவின் சீயட்டிலில் நகரில் உள்ள உற்பத்தியாளர் மையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வின் இறுதி அறிக்கையை விசாரணை அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ளனர்.
இறுதி அறிக்கையை வெளியிடுவதில் AAIB தாமதம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அரசு நிராகரித்துள்ளது.
பெரிய அளவிலான விமான விபத்து விசாரணைகள் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவடைவதில்லை என்றும், புதிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் விரிவடையும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், முழுமையான விசாரணை முடிந்ததும் இறுதி அறிக்கை AAIB இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.