'அதிமுக உடையவில்லை..ஆனால்': EPS-க்கு எஸ்.பி.வேலுமணி வைத்த செக்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் அதிமுக-வின் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று சென்னையில் விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், சி.வி. சண்முகம் தலைமையிலான அதிருப்தி குழுவிற்கும் இடையே மோதல் முற்றியுள்ள சூழலில், கட்சி உடையவில்லை என்றும், சில மாற்றங்களை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சி.வி.சண்முகம் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.பி.வேலுமணி, அதிமுக-வை உடைப்பதாகக் கூறப்படும் புகார்களை முற்றிலுமாக மறுத்தார். "நாங்கள் அதிமுக-வை இரண்டாக உடைக்கிறோம் என்று பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அவதூறானவை. அத்தகைய நோக்கம் எங்களுக்கு அறவே இல்லை. புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா கட்டிக்காத்த இந்த இயக்கம் எப்போதும் உடையாது" என்று அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.
கேள்விகள்
தொடர் தோல்விகளால் எழுந்த கேள்விகள்
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சலுக்கான காரணத்தைத் தெளிவுபடுத்திய அவர், சமீபகாலமாக அதிமுக சந்தித்து வரும் தொடர் தேர்தல் தோல்விகளே இதற்குக் காரணம் என்றார். "கட்சி ஏன் தொடர்ந்து தோற்கிறது என்ற நியாயமான கேள்விகளை மட்டுமே நாங்கள் எழுப்பினோம். கட்சியின் நலன் கருதியே சில முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆரோக்கியமான விவாதங்கள் ஒரு ஜனநாயகக் கட்சிக்குத் தேவையானது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கோரிக்கை
எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்று இறங்கி வந்து, அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என்று வேலுமணி கேட்டுக்கொண்டார். "பொதுச்செயலாளர் உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்டி, கட்சி கட்டுக்கோப்பாகச் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். அவர் ஒரு படி இறங்கி வந்து கட்சியினரின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என அவர் தெரிவித்தார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு மாற்றாகச் சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியைத் தேர்வு செய்து சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தாலும், அது அதிகாரப் போட்டிக்காக அல்ல, மாறாகக் கட்சியின் ஆளுமையை நிலைநிறுத்தவே என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஆதரவு
தவெக அரசுக்கு அதிமுக ஆதரவு: தீர்மானம் நிறைவேற்றம்
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியை அதிமுக ஆதரிக்கும் என்று சி.வி. சண்முகம் அறிவித்தார். இதற்காக அதிமுக சட்டமன்றக் குழு கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், அம்மாவின் ஆட்சியை மீண்டும் மலரச் செய்யப் புத்துயிரோடு செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.