ஸ்டாலினுடன் கைகோர்க்க முயன்றாரா ஈபிஎஸ்? சி.வி.சண்முகம் உடைத்த பகீர் உண்மைகள்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிப்பதற்கான காரணங்கள் குறித்து அவர் வெளியிட்ட தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், அதிருப்தி குழுவிற்கும் இடையிலான மோதல் இப்போது பகிரங்கமாகியுள்ளது.
கேள்வி
திமுக-வுடன் ரகசிய உடன்பாடா? சி.வி. சண்முகம் கேள்வி
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.வி. சண்முகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். "எந்த திமுகவை எதிர்த்து எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தைத் தொடங்கினாரோ, அதே திமுக-வின் ஆதரவோடு ஆட்சி அமைக்கலாம் என்ற முன்மொழிவை எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார். இதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். திமுக-வுடன் இணைந்தால் அதிமுக என்ற இயக்கமே அழிந்துவிடும்; எனவே இந்தத் தவறான முடிவை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்" என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.
ஆதரவு
தவெக அரசுக்கு அதிமுக ஆதரவு: தீர்மானம் நிறைவேற்றம்
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியை அதிமுக ஆதரிக்கும் என்று சி.வி. சண்முகம் அறிவித்தார். இதற்காக அதிமுக சட்டமன்றக் குழு கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், அம்மாவின் ஆட்சியை மீண்டும் மலரச் செய்யப் புத்துயிரோடு செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கோரிக்கை
பொதுக்குழுவைக் கூட்டக் கோரிக்கை
தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயவும், தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகச் சண்முகம் கூறினார். "இந்தத் தோல்விக்கு நாங்கள் அனைவரும் பொறுப்பேற்கிறோம்; யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஆனால், இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது" என்று கூறி தனது உரையை அவர் நிறைவு செய்தார். அதிமுக-வின் இந்த திடீர் திருப்பம், தமிழக வெற்றிக் கழக அரசு சட்டப்பேரவையில் பலம்பெற உதவும் அதே வேளையில், அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்தைச் சிக்கலாக்கியுள்ளது.