
கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கம்; ஆதரவாளர்களுக்கும் கல்தா
செய்தி முன்னோட்டம்
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியிலிருந்து முன்னர் நீக்கப்பட்ட தலைவர்களான வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற, ஒன்றுபட்ட அதிமுகவே அவசியம் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி (இபிஎஸ்), இந்தத் தலைவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்த செங்கோட்டையன், அவர் தவறும் பட்சத்தில், தன்னைப் போன்ற ஒத்த கருத்துள்ள உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கட்சியை மீண்டும் ஒருங்கிணைப்போம் என்று எச்சரித்தார்.
நீக்கம்
செங்காட்டையன் மற்றும் ஆதரவாளர்கள் நீக்கம்
கட்சியை வலுப்படுத்த முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் விமர்சகர்களை மீண்டும் சேர்த்த உதாரணங்களை அவர் சுட்டிக்காட்டினார். எனினும், இந்தக் கருத்துக்களுக்குப் பிறகு, செங்கோட்டையன் வகித்து வந்த மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மட்டுமல்லாது ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் என கருதப்படும் பல நிர்வாகிகளும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். செங்கோட்டையன் மற்றும் ஆதரவாளர்களின் நீக்கம், அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசலின் தீவிரத்தைக் காட்டுகிறது. இந்த நடவடிக்கை, கட்சியின் எதிர்காலத் திசை குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/BgB5kMOnpH
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) September 6, 2025