LOADING...
ஒரு இரவு தங்க ரூ. 32 லட்சமா? டெல்லியில் மிரட்டும் ஹோட்டல் கட்டணங்கள்; என்ன காரணம்?
'AI Impact Summit' மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் மிரட்டும் ஹோட்டல் கட்டணங்கள்

ஒரு இரவு தங்க ரூ. 32 லட்சமா? டெல்லியில் மிரட்டும் ஹோட்டல் கட்டணங்கள்; என்ன காரணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2026
01:12 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள 'AI Impact Summit' மாநாட்டை முன்னிட்டு, தலைநகரில் உள்ள சொகுசு ஹோட்டல்களின் கட்டணம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கூகுள் CEO சுந்தர் பிச்சை, Open AI நிறுவினர் சாம் ஆல்ட்மேன் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்விற்காக, சில ஹோட்டல்களில் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் ரூ. 30 லட்சத்தை தாண்டியுள்ளது. Moneycontrol வெளியிட்டுள்ள செய்தியின்படி, இது காதலர் தின உச்சக்கட்ட கட்டணத்தை விட 1,500 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணங்கள்

தலைசுற்ற வைக்கும் கட்டணங்கள்

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற தாஜ் பேலஸ் ஹோட்டலில், பிப்ரவரி 16 முதல் 20 வரையிலான தேதிகளில் 'கார்டன் லக்ஸரி சூட்' அறையின் ஒரு இரவு கட்டணம் வரி உட்பட சுமார் ரூ.32 லட்சமாக உள்ளது. இதே அறை பிப்ரவரி 13-ம் தேதி வெறும் ரூ. 2 லட்சத்திற்கு கிடைக்கிறது. அதாவது மாநாட்டு நாட்களில் கட்டணம் 15 மடங்கு உயர்ந்துள்ளது. இதேபோல், Hyatt ஹோட்டலின் சிக்னேச்சர் சூட் கட்டணம் ரூ. 3.86 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 35,000-க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தி லலித், ஈரோஸ் மற்றும் ஜெய்பீ வசந்த் கான்டினென்டல் போன்ற முன்னணி ஹோட்டல்களில் 95%கும் அதிகமான அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

பாதிப்பு

சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து பாதிப்பு

இணையதள முன்பதிவு தளமான ixigo-வின் தரவுகளின்படி, டெல்லி ஹோட்டல்களுக்கான தேடல் 6 மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய டெல்லியில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் குறைந்தபட்ச கட்டணமே ரூ. 70,000 முதல் ரூ. 1 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த மாநாடு டெல்லியின் ஹோட்டல் துறைக்கு குறுகிய கால லாபத்தை தருவது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பெரிய மாநாடுகளை நடத்தும் மையமாக (MICE Hub) டெல்லியின் நிலையை உறுதிப்படுத்துகிறது. ஹோட்டல் அறைகள் மட்டுமின்றி, உணவு, போக்குவரத்து மற்றும் இதர சேவைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நொய்டா மற்றும் குருகிராம் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றன.

Advertisement