தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னை விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று(ஜூன்.,12)வருகைத்தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு வந்த மாணவிகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்று, அவர்களோடு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் ப்ளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து குறித்து மாநிலக்கல்வி கொள்கையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து, ப்ளஸ்-2 வகுப்பினை முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தமிழக அரசு நிதிநிலை சீரானப்பின்னர் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். இதனிடையே, பள்ளி மாணவர்களுக்கு டேட்டா கார்டுடன் கூடிய இலவச டேப்லெட் வழங்கப்படும் என்று திமுக கடந்த 2021ம்ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால் அந்த அறிக்கையும் இன்னமும் செயல்முறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.