மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள், நேற்று(மே 3) இரவு குடிபோதையில் இருந்த காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். மல்யுத்த வீரர்கள் போராட்ட இடத்திற்கு படுக்கைகளை கொண்டு வர முயற்சித்தபோது போலீசார் தங்களை தாக்கியதாக கூறியுள்ளனர். பல மல்யுத்த வீரர்களின் தலையில் தாக்கப்பட்டது. அதில் இருவர் காயம் அடைந்தனர். ஒருவர் மயங்கி விழுந்ததை அடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்தி அனுமதியின்றி படுக்கைகளுடன் போராட்ட இடத்திற்கு வந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் வன்முறையால் மல்யுத்த வீரர்கள் கலக்கம்
தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், குடிபோதையில் மல்யுத்த வீரர்களைத் தாக்கியதாக போராட்டக்காரர்கள் காவல்துறையினரை குற்றம்சாட்டுகின்றனர். "குடிபோதையில் இருந்த போலீஸ்காரர் தர்மேந்திரா, வினேஷ் போகட்டை அடித்துவிட்டு எங்களுடன் தகராறில் ஈடுபட்டார்." என்று முன்னாள் மல்யுத்த வீரர் ராஜ்வீர் கூறியுள்ளார். ஒலிம்பியனும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான கீதா போகட், போலீஸ் வன்முறையால் தனது இளைய சகோதரர் துஷ்யந்த் போகட்டின் தலை உடைந்துவிட்டது என்று கூறியுள்ளார். ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகட், இப்படி நடத்தப்படுவதற்கு தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று கூறியுள்ளார். மேலும், "நீங்கள் எங்களைக் கொல்ல விரும்பினால், எங்களைக் கொல்லுங்கள்" என்று போகட் அழுதுகொண்டே கூறி இருக்கிறார்.